×

வெற்றி வேலர் மகாவீர சுப்ரமண்யர்

உலகம் விராட்புருடனின் வடிவமாய் விளங்குகிறது. இதன் இதயத்தானமாய் அமைந்தது ‘‘கோயில்’’ என சிறப்புப் பெயர் பெறுவது தில்லைச்சிற்றம்பலம் (சிதம்பரம்) ஆகும். இங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் ஐந்தொழில் வல்லவராய் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், மற்றும் அருளல் எனும் பஞ்ச கிருத்திய பரமானந்தத் தாண்டவத்தை, அன்னை சிவகாமியோடு இடையறாது நிகழ்த்துவது உலகம் உணர்ந்த உண்மை. இச்சிறப்பு மிகுந்த நடராஜர் கோயில் ஸ்ரீ சபாநாயகர் கோயில் எனவும் அழைக்கப் பெறுகிறது. இக்கோயில் எண்ணற்ற நிலையில் கந்தவேள் மூர்த்தங்கள் இருப்பினும் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ள மூன்றினைப்பற்றி இங்கே காண்போம்:

1. பொற்சபைக்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்திற்கு அருகிலுள்ளது ஸ்ரீ தண்டாயுதபாணி சந்நதி (வளர்முருகன்). இது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறது.

2. வடக்குகோபுரத்திற்கு அருகிலுள்ள பாண்டிய நாயகம் ஸ்ரீ வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆண்டு தோறும் நிகழும் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் ஏற்கும் தெய்வமாக விளங்குகிறார்.

3. மேற்கு கோபுரம் அருகிலுள்ள குமரக் கோட்டத்தில் ஸ்ரீ செல்வமுத்து குமாரசுவாமி ஸ்ரீ வள்ளி தேவசேனாவுடன் எழுந்தருளியிருக்கிறார். இவர் கந்த சஷ்டி விழாவினை ஏற்கும் குமரக்கடவுள் ஆவார். மாவிளக்குப் பிரார்த்தனை ஏற்கும் மூர்த்தம் இவரே. இக்கோட்டம் இக்கோயிலின் ப்ராணமய கோசமாகிய 3 வது பிரகாரத்தில் அமைந்துள்ளது.

கோஷ்டம் என்ற சொல் கோட்டம் எனவும் அழைக்கப் பெறும். ஒரு பெருங் கோயிலில் தனித்த நிலையில் உற்சவம் காணும் மூர்த்தம் உள்ள சந்நதியைச் சிறப்பிக்க கோட்டம் என்று போற்றுதல் மரபாகும், காரணம், இங்குறை, ஸ்ரீ முருகக் கடவுளே கந்த சஷ்டிப் பெருவிழா நாயகனாவார். இதனை அருணகிரி நாதர் தில்லைத் திருப்புகழில்,

தாது மாமலர் முடியா லேப
தறாத நூபுர அடியா லேகர
வீறு சேர்வரை யரசாய் மேவிய
மேரு மால்வரை யெனநீள் கோபுர
மேலை வாயிலின் மயில் மீ தேறிய பெருமாளே......

எனும் பதிகம் மூலம் பதிவு செய்கிறார். மேலும் ‘‘வள்ளி தேவசேனாம் முத்துக்குமார ஸ்வாமி னாம் ப்ரபூம்’’‘‘தாரகஞ்சம் மகா வீர சுப்ரமண்யம் உபாஸ்மஹே’’ எனவும் சிறப்பிக்கப் பெறுகிறார். இவ்வரிகள் மூலம் தில்லைத்தல முருகப் பெருமான் மூர்த்தங்களுள் ‘‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் (உலகில் அல்லவை அகன்று நல்லவை பெருகிட) எனும் ஆறுமுக்கடவுள் தம் அவதாரச் சிறப்பின் பெருமையை புலப்படுத்துவதுடன் கந்த சஷ்டி விழாவிற்கான கந்தவேள் இவரே எனவும் உணர்த்தப் பெறும். கந்த சஷ்டித் திருவிழா: பொதுவாக திருக்கோயில்களில் ஆண்டிற்கு ஒருமுறை, இருமுறை அல்லது அதற்கு மேற்பட்டும் கொடியேற்றம் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுவது பெருந்திருவிழா அல்லது பிரம்மோற்சவம் எனப்படும். ஆனால் ஒரு இறைவன் அல்லது இறைவியின் அருட்சிறப்பு மற்றும் வீரச்சிறப்புகளை போற்றும் வகையில் 10 தினங்களுக்குக் குறைந்த நிலையில் நடைபெறும் திருவிழாக்கள் கொடியேற்றுதல் நிகழ்ச்சிக்குப் பதிலாக காப்புகட்டுதல் என்ற முறையில் நிகழ்த்தப்பெறும், இவ்வாறு காப்புகட்டி நடைபெறும் திருவிழாக்களுள் ஒன்றே கந்த சஷ்டிப் பெருவிழாவாகும்.

முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கும் இந்த கந்த சஷ்டி உற்சவம் 6 நாள் அன்று வெள்ளி மயில் வாகனத்தில் வெற்றி வேலாயுதப் பெருமான், தில்லை வாழ்ந்தணர்கள் ( தீட்சிதர்கள்), செங்குந்த குலம்சேர் நவவீரர்கள் புடைசூழ சூரஸம்ஹார நிகழ்ச்சிக்கு சென்று சூர பதுமன் கொண்ட பகைமை உணர்வினை அழித்து அவனது மாமர வடிவினை இருகூறாக்கி சேவற்கொடியாய் ஆட்கொள்ளும் நிகழ்ச்சியும், மறுநாள் அதாவது 7ம் நாள் தில்லைக் கோயிலுள்ள ஐந்து சபைகளில் ஒன்றான தேவசபை எனப் பெறும் பேரம் பலத்தில் (உற்சவமூர்த்திகள் உள்ள இடம்) வேட மங்கையான வள்ளி மற்றும் வேழமங்கையாம் தேவயானை ஆகியோருடன் வெற்றி வேலவரான வீரசுப்ரமண்யர்க்கு திருக்கல்யாண மகோற்சவமும் நடைபெறுவது மரபு. இவ்விழா இத்தலத்தில் ஞானசக்தியாய் விளங்கிடும் அன்னை சிவகாமி அம்பிகைக்கு ஆண்டு தோறும் நிகழும் ஐப்பசி பூரப்பிர்ம் மோற்சவம் (பூரச்சலங்கை விழா அல்லது பாலி வளத்திருநாள்) நிறைவுற்ற பிறகு வருகின்ற வளர்பிறை பிரதமை திதியன்று துவங்கும்.

இவ்விழாவில் காப்பு கட்டி விழாவின் ஆச்சார்ய பூஷணமாய்த் திகழும் தீட்சிதர் யாரெனில் ஆனி உத்திரப் பிரம்மோற்சவ விழாவை அம்மையப்பருக்கு வைதீக முறைப்படி பூசைகள் புரிந்தவரே சிவகாமி அம்பிகைக்கும் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். இவ்வாறு தகப்பனுக்கும் அன்னைக்கும் விழாக்களை நிகழ்த்தியவரே தகப்பன்சாமிக்கும் கந்த சஷ்டி விழாவை நிகழ்த்துவது சிறப்பான ஒன்றாகும். மேலும் இவ்வாறு ஐப்பசி மாதம் நிகழ்ந்தால் ‘‘கந்த சஷ்டி’’ எனவும், கார்த்திகை மாதம் நிகழ்ந்தால் ‘‘சம்பக சஷ்டி’’ என்றும் அழைக்கப் பெறும். இவ்விழாவின் சிறப்பாகக் கருதுவது கந்த சஷ்டி நாளன்று ‘‘மாவிளக்கு பிரார்த்தனை’’ நிறைவேற்றப் பெறுவது ஆகும். தந்தைக்கும் தனையனுக்கும் ஒருவரே பூசை புரிகின்ற நிலை ஐந்தொழில் வல்ல சிவபெருமானும், இவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து அவதரித்த ஆறுமுகமாய் விளங்கிடும் செல்வ முத்துக்குமரனும் ஒப்ப நோக்கும் நிலையை உறுதி செய்யும். இதனை குமரகுருபரர் தம் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ். அறிவுள் அறிவை அறியுமவரும் (சிவபெருமான்) (முருகப்பெருமான்) அறிய அரிய பிரமமே உணர்த்துவதைப் போல, மணிவாசகம் பெருமான் தம் திருச்சிற்றம்பலக் கோவையாரில், (எட்டாம் திருமுறை)
உணர்ந்தார்க்கு உணர்வரியோன் தில்லைச்சிற்றம் பலத்து ஒருவன், என்னும் வரிகளால் மெய்ப்பிக்கப் பெறுகிறது.

இத்தகு சிறப்புகள் உற்றசிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கோயிலில் குமரக்கோட்டம் எழுந்தருளும் ஸ்ரீ வள்ளி தேவஸேனா உடனுறை ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமி (ஆறுமுகக் கடவுளாய் மயிலூர்தியில் வீற்றிருப்பவர்) மற்றும் பிரம்மன், சரஸ்வதி நவவீரர்கள் உள்ளிட்ட அனைத்து மூர்த்தங்களுக்கும் புனராவர்த்தம் புரி நிலையில் அஷ்டபந்தனம் சாற்றப்பட்டும், எழிலுறு ஓவியங்களை புனைந்தும் முகப்பு மண்டபம் புதிதாக அமைத்தும் பெருஞ்சாந்தி பெருவிழா என்னும் கும்பாபிஷேகம் 1122019 திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நன்னீராட்டுப் பெருவிழா தில்லை நடராஜர் கோயிலை நிர்வகிக்கும் உரிமையுடன் வைதிக நெறிப்படி பூசைகள் புரிந்து வரும் தில்லை வாழ் அந்தணர்கள் (பொது தீட்சிதர்கள்) பெரு முயற்சியாலும் செங்குந்த மரபினர் பேருதவி கொண்டும் ஆன்மிக அன்பர்களின் உதவியுடன் நிகழ்த்தப் பெறுகிறது. இதனைக் கண்ணுறும் இறையடியவர்கள் யாவரும் பெருங்கருணைக் கொண்டு வாழ்பவர்க்கெல்லாம் எளியோனாய் அருள்பாலிக்கும் ‘‘கனசபை மேவும் கந்தப் பெருமான்தம் பேரருளுக்குப் பாத்திரமாவது திண்ணம்’’. இது வேத சத்தியம்.

நவவீரர்களின் பெயர்கள்
1. வீர பாகுத்தேவர்
2. வீர மார்த்தாண்டர்
3. வீர ராக்கதர்
4. வீர மகேந்திரர்
5. வீர தீரர்
6. வீர மகேஸ்வரர்
7. வீர சேகரி
8. வீர புரந்தரர்
9. வீராந்தகர்
அஷ்டபந்தன பருந்துகள் :
1. கொம்பரக்கு
2. கருங்குங்கிலியம்
3. சுக்கான்
4. காவிக்கல்
5. வெண்மெழுகு
6. செம் பஞ்சு
7. உலர்ந்தலிங்கும் குடமுழுக்கு விழாவின் முக்கிய பங்கு பெறும் இவ்வெட்டு பருந்துப் பொருள்களும் சாற்றப்பெறும் தன்மையால் பூமிக்கும் மூர்த்திக்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தும். ஆகையால் இது தெய்வீக பந்தனம் எனச் சிறப்பிக்கப் பெறுகிறது.

புலவர். சி.குப்புசாமி, சிதம்பரம்

Tags : Victory ,Veler Mahavira Subramaniar ,
× RELATED காங். மூத்த தலைவர் பேட்டி...